வெளிநாட்டு சிறைகளில் உள்ள 10,500 இந்தியர்கள்; 43 பேருக்கு மரண தண்டனை விதிப்பு - மத்திய அரசு தகவல்
அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 இந்தியர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;-
"வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் தற்போது 10,574 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறைகளில் அதிகபட்சமாக 2,773 இந்தியர்கள் உள்ளனர்.
அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர கத்தாரில் 795, மலேசியாவில் 380, குவைத்தில் 342, இங்கிலாந்தில் 323, பஹ்ரைனில் 261, பாகிஸ்தானில் 246 மற்றும் சீனாவில் 183 இந்தியர்கள் தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அதே சமயம் பெல்ஜியம், அங்கோலா, கனடா, சிலி, எகிப்து, ஈராக், ஜமைக்கா, மொரீசியஸ், செனகல், சீசெல்ஸ், தென் ஆப்பிரிக்கா, சூடான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சிறைகளில் உள்ள 10,574 இந்தியர்களில், 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 இந்தியர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து சவுதி அரேபியாவில் 7, சீனாவில் 4, இந்தோனேசியாவில் 3, குவைத்தில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்கா, மலேசியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள், நீதித்துறை தலையீடுகள் மற்றும் பொது மன்னிப்புக்கான முறையீடுகள் மூலம் வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இந்தியர்களுக்கு சட்ட உதவி, தூதரக அணுகல் மற்றும் முன்கூட்டியே விடுதலை அல்லது நாடு திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 இந்திய மீனவர்களில்(27 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்) விடுவிக்க இலங்கை அரசுடன் இந்திய அரசு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலக அளவில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கு இந்தியாவின் சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.