காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்-கே.வி.தங்கபாலு பேட்டி
காங்கிரஸ் கொள்கை என்பது பூரண மதுவிலக்கு; இதற்காக தொடர்ந்து போரடுவோம் என்று கேவி தங்கபாலு கூறினார்.;
களியக்காவிளை, -
காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவரும் காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான கே.வி. தங்கபாலு நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவர் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்க, மீட்டு எடுக்க நாங்கள் இணைந்து ஒரு குழு அமைத்துள்ளோம். தமிழக முழுவதும் 95 சதவீதம் சொத்து காங்கிரசிடம் வந்துவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 20 ஆண்டாக வெற்றி கூட்டணியாக உள்ளது. விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு என்பது குறித்து கூட்டணி கணக்கு போடத்தான் செய்வார்கள். அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம். முன்னாள் முதல்-அமைச் சர் காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். காங்கிரஸ் கொள்கை என்பது பூரண மதுவிலக்காகும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.