கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் - சீமான்
கடல் அரிப்பை தடுப்பதற்கான எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.;
கோப்புப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடல் அரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்காமல் காலங்கடத்தி வரும் தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
புத்தன்துறை பகுதியில் கடல் அரிப்பால் மக்களின் வாழ்விடங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே அப்பகுதி மக்கள் ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் மனு அளித்து முறையிட்டு வருகின்றனர். குறைந்தபட்சம் பாதிப்புகளிலிருந்து உடைமைகளை பாதுகாக்க ஒரு தற்காலிக அலை தடுப்பு சுவராவது அமைத்து தரவேண்டி கிராம மக்களும், மீனவர் நல அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் இவை எவற்றையும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் இதையே காரணம் காட்டி மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்ற நினைப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.
தி.மு.க. அரசின் அலட்சியம் காரணமாக புத்தன்துறையில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கடல் அரிப்பால் தற்போது 13 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவச் சொந்தங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீனவ மக்கள் மீதான தி.மு.க. அரசின் அக்கறையின்மையே, இன்று புத்தன்துறை மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய துயரநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பகுதிகளில் இடம் தருவதாக கூறி மீனவ மக்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவது வெட்கக்கேடானது. ஒருபோதும் ஏற்க முடியாத கொடுங்கோன்மையாகும்.
கடல் சூழலியலை பாதிக்கும் கட்டுமானங்களை எவ்வித தடையுமின்றி செய்ய துணைநிற்கும் தி.மு.க. அரசு, இயந்திரங்கள், அதனால் ஏற்படும் சூழலியல் எதிர்விளைவான கடல் அரிப்பை தடுப்பதற்கான எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன்? கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் எதிர்காலத்தில் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகள் அனைத்தையும் ஆய்வு செய்து அப்பகுதிகளுக்கு தகுந்த கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் ஒற்றை கோரிக்கையாகும்.
ஆகவே, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புத்தன்துறை மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் முடிவை கைவிட்டு, வீடுகளையும் விலைமதிப்பில்லா உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க உடனடியாக பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.