தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.;
மேட்டூர்,
'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் விஜயகாந்த் ரத யாத்திரை நேற்று மாலை சேலம் மாவட்டம் மேட்டூர் மாதா கோவில் பாதை முன்பு தொடங்கியது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு பிரேமலதா பேசியதாவது:-
இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு தொண்டர் உருவத்திலும் கேப்டனை பார்க்கிறேன். இந்த கேப்டன் ரதம் இலங்கை வாழ் தமிழரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விஜயகாந்த் ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தன்னுடைய பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தவர் விஜயகாந்த். அவர் தனக்கென்று எதுவும்செய்து கொள்ளாமல், ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளையும், நல உதவிகளையும் வழங்கினார். அவருடைய கொள்கை, கோட்பாடுகளை வழி நடத்த எங்களை விட்டுச்சென்றுள்ளார். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் கேப்டனின் தே.மு.தி.க. கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.