ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு ; ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற அக்டோபர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.;

Update:2025-08-12 07:28 IST

சென்னை.

ஐ.பி.எஸ். அதிகாரி செல்வ நாகரத்தினத்துக்கு எதிராக டி.ஜி.பி.யிடம் இளம் பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தார். அதில், ‘‘இன்ஸ்டாகிராம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரி செல்வ நாகரத்தினம் என்னுடன் பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி உடல் ரீதியாக உறவில் இருந்தார். பின்னர் என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதுகுறித்து கேட்டபோது துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்'' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து செல்வ நாகரத்தினத்துக்கு டி.ஜி.பி. குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பினார். இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் குறிப்பாணையை ரத்து செய்து, புதிதாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கலாம் என்று உத்தரவிட்டது.

இதன்படி அனுப்பப்பட்ட புதிய குற்றச்சாட்டு குறிப்பாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வ நாகரத்தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற அக்டோபர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை இந்த குற்றச்சாட்டு குறிப்பாணை தற்போதைய நிலையே தொடரவேண்டும் (தடை) என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுகுறித்து இறுதிகட்ட விசாணையின்போது முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்