தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்று போலி பிம்பம்: ஐகோர்ட்டில் விளக்கம்
தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்று போலி பிம்பம் என்று ஐகோர்ட்டில் அரசு விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்தவா, நீதிபதி சுந்தர்மோகன் முன்பு நேற்று காலையில் வக்கீல் வினோத் என்பவர் முறையிட்டார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், இன்று (செவ்வாய்கிழமை) விசாரிப்பதாக கூறியிருந்தனர். ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வில் வக்கீல் ஆஜராகி, மீண்டும் நேற்று வைத்த கோரிக்கையை முன் வைத்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘நேற்று நீங்கள் தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் உள்ளதாக பதிவுத்துறை கூறியுள்ளது. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய மனு தாக்கல் செய்தார், அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவாக உள்ளது. ஆனால், தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போல ஒரு போலி பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர்” என்றார்.