தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 300 பேர் மீண்டும் பணிக்கு வந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், வழக்கை முடித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதாக தூய்மை பணியாளர்கள் கூறினர். நேற்றுக்கூட அனைவரிடமும் பேசிவிட்டு தான் வந்துள்ளேன். சுமூகமாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி. எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார். தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது; அதற்கு கால அவகாசம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.