கடவுள் ராமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2025-08-12 10:12 IST

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கொள்காட்டி பேசினார். அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என அவர் பேசிய கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ராமர் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கம்பன் விழாவில் ராமரை இழிவுபடுத்தி கவிஞர் வைரமுத்து பேசியதாக கூறி புதுவை மாநில பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

இதில் மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, மாநில செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வைரமுத்துவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். திடீரென அவரது புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உருளையன்பேட்டை போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவிஞர் வைரமுத்து பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

“சமீபத்தில் நடந்த திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து இந்துக்கள் போற்றி வணங்கும் பகவான் ஸ்ரீ ராமரை அவதூறாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” நிறுவி வைணவ பக்தியைப் பரப்புவதாகக் கூறுவது மட்டுமன்றி, கம்பராமாயணத்தையும் ஆய்வு செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிற திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும், ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கொடுத்தோமென பெருமையாகக் கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும்ம் வைரமுத்துவின் இத்தகைய இந்துவிரோதப் போக்கை ஆமோதிக்கிறார்களா?.

“மத ஒற்றுமை” குறித்து மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினர் இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்காதது ஏன்?. அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை திமுக உடன்பிறப்புகள் பலர் இந்து மதத்தவராக இருக்கையில் இதுபோன்ற கருத்துகள் அவர்களது கட்சியினரையும் புண்படுத்தும் என்பது தெரியாதா?.

எனவே, கம்ப ராமாயணத்தை முழுமையாகப் படித்துணராமல், தமிழ் அகராதியின் அடிப்படை அர்த்தம் அறியாமல் வைரமுத்து போன்றோர் தங்கள் இஷ்டத்திற்கு திரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது. தனது இந்த அவதூறான கருத்துகளுக்கு பொதுவெளியில் அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தங்களை மத நல்லிணக்கத்தின் தூணாக முன்னிறுத்திக் கொள்ளும் ஆளும் அரசு அதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்