மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டர் குற்றவாளி என தீர்ப்பு - தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ‘கராத்தே மாஸ்டர் குற்றவாளி' என சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update:2025-08-12 08:40 IST


சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கெபிராஜ் (வயது 41). கராத்தே மாஸ்டர். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர கராத்தே பயிற்சியாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் சில பள்ளிகளிலும் அவர், பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பயிற்சி பெறும் மாணவிகளை போட்டிக்காக வெளி மாவட்டங்களுக்கு கெபிராஜ் அழைத்து செல்வது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவிகளை போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்றுள்ளார்.

போட்டி முடிந்த பின்பு நாமக்கல்லில் இருந்து ஈரோடு ரெயில் நிலையத்துக்கு காரில் வந்த போது 19 வயது மாணவிக்கு கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த மாணவி கடந்த 2021-ம் ஆண்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன்பின்பு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி சென்னை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி வாதாடினார். போலீசார் தரப்பில் 32 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று ‘கெபிராஜ் குற்றவாளி' என தீர்ப்பு கூறப்பட்டது.

இந்நிலையில் தண்டனை விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்