மகளை கொன்று இறுதிச்சடங்கு செய்துவிட்டு தந்தை தற்கொலை - பரபரப்பு தகவல்கள்
வீட்டில் பழனியப்பன், அவரது மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி (23) என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். இதில் கார்த்திகா திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். நல்லசாமிக்கும் திருமணமாகி விட்டது.
தனலட்சுமிக்கு (23) திருமணம் ஆகாததால் பெற்றோருடன் வசித்து வந்தார். தனலட்சுமிக்கு திருமணத்துக்காக வரன் பார்த்து வந்தனர். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பால் திருமண வரன் கைகூடவில்லை என்று தெரிகிறது. தனது மகளின் உடல்நிலை பாதிப்பு, திருமண தடை போன்றவற்றால் பழனியப்பன் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி விஜயா தனது மகன் நல்லசிவத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் சென்றுவிட்டார். வீட்டில் பழனியப்பன், அவரது மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர். இதற்கிடையே திருச்செந்தூருக்கு சென்ற விஜயா, தனது கணவரின் செல்போனுக்கு நேற்று முன்தினம் அழைத்தார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை யாரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர், உடனடியாக கணக்கன்பட்டியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள், பழனியப்பன் வீட்டுக்கு வந்தனர். ஆனால் வீடு உள் பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பழனியப்பன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் தனலட்சுமியும் இறந்த நிலையில் இருந்தார்.
ஆனால் தனலட்சுமிக்கு இறுதிச் சடங்கு செய்து மாலை போடப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட போலீசார், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. அதன் முடிவில், தனலட்சுமி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதும், பழனியப்பன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, “தனலட்சுமிக்கு உடல் நிலை பாதிப்பு மற்றும் திருமணம் தடைபட்டு வந்ததை நினைத்து சில நாட்களாகவே பழனியப்பன் மனமுடைந்து இருந்தார். எனவே மகள் கஷ்டப்படுவதை பார்த்து வேதனை அடைந்த அவர், தனலட்சுமியை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதற்காக மனைவி, மகன் குடும்பத்தினரை கோவிலுக்கு அனுப்பி வைத்தார். பின்பு மனதை கல்லாக்கிக் கொண்டு தனலட்சுமியை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். அவர் இறந்த பின்பு அவருக்கு புதிய பட்டுசேலை போர்த்தி, பத்தி-சூடம் பற்ற வைத்து நெற்றியில் சந்தனம், குங்குமம் திருநீறு பூசி இறுதிச்சடங்கு செய்துள்ளார். பின்பு மகளை கொலை செய்த அதே கயிற்றால் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்.” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.