மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான்: மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
தூத்துக்குடி,
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
"தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்று வின்பாஸ்ட். அடிக்கல் நாட்டின் 17 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.