சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா பதவியேற்பு
புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இதற்கான விழா சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றாது. கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அரசு பிளீடர்கள், அரசு செயலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யார் இந்த எம்.எம். ஸ்ரீவத்சவா?
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். சத்தீஷ்கரின் பிலஸ்பூரை சேர்ந்த இவருக்கு தற்போது 61 வயது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் பணியாற்றிய அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.