ஞான திரவியம் மீதான வழக்கு: 6 மாதங்கள் சம்மன் வழங்காதது ஏன்? - காவல்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் வழங்க இயலாவிட்டால் தனிப்பிரிவு அமைக்க உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.;

Update:2025-07-21 16:48 IST

சென்னை,

நெல்லை மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 26-ந்தேதி, நெல்லை தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காட்ப்ரே நோபிள் அளித்த புகாரின் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி காட்ப்ரே நோபிள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞான திரவியத்திற்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் வழங்க இயலாவிட்டால் தனிப்பிரிவு அமைக்க உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்கியது குறித்தும், அவர் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்