திருச்சி: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 11 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் 11 புதிய பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
திருச்சி,
திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ள 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நம் முதல்-அமைச்சரால் திறக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ள 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகள் மற்றும் 1 நகரப் பேருந்து உட்பட மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, ஆகியோருடன் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.