கள்ளக்காதல் விவகாரம்: வாலிபர் கொலையில் கள்ளக்காதலி மற்றும் 2 சிறுவர்கள் கைது
அரவிந்த் மேத்யூவுக்கு உஷா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.;
சென்னை,
தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கூலிப்படையை வைத்து கள்ளக்காதலியே கொன்று வீசியது அம்பலமானது. இது தொடர்பாக 3 பேர் கைதானார்கள்.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் மேத்யூ (வயது 29). இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு சாரிகா என்ற 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. அரவிந்த் மேத்யூ, காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை கொண்டு செல்லும் வேலை செய்து வந்தார்.
கடந்த ஜூன் 19-ந் தேதி வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற அரவிந்த் மேத்யூ, புட்லூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்ததாக கிடைத்த தகவலின்பேரில் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அரவிந்த் மேத்யூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மகன் சாவில் மர்மம் இருப்பதாக அரவிந்த் மேத்யூவின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் அரவிந்த் மேத்யூ, வெட்டி படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அரவிந்த் மேத்யூவுக்கு அதே புட்லூர் பகுதியைச் சேர்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஆனால் உஷாவுக்கு மேலும் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அரவிந்த்மேத்யூ, கள்ளக்காதலியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உஷா, கூலிப்படையை ஏவி அரவிந்த் மேத்யூவை வெட்டிக்கொலை செய்துவிட்டு, ரெயில் மோதி பலியானது போல் போலீசாரையும், மற்றவர்களையும் நம்ப வைக்க உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலி உஷா மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பால்ராஜ் என்பவரை திருவள்ளூர் ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.