தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்: கொலைப்பழியை ஏற்று போலீசில் சரணடைந்த தாய்

மகனை காப்பாற்ற தாய் கொலைப்பழியை ஏற்று போலீசில் சரணடைந்தது விசாரணையில் அம்பலமானது.;

Update:2025-08-10 15:54 IST

சென்னை சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52 வயது). இவரது மனைவி பிரமிளா (47 வயது). இவர்களுக்கு வசந்தகுமார் (30 வயது), ராஜபிரபா (25 வயது) மற்றும் முகில் (19 வயது) ஆகிய 3 மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன், பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பிரமிளா, தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்ற பிரமிளா, நேற்று முன்தினம் இரவு தனது இளைய மகன் முகில் மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததுடன், என்னையும் கொன்று விடுவதாக மிரட்டினான். இதனால் அவனை நான் வெட்டிக் கொன்றுவிட்டேன் என்று கூறி சரணடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி பிரமிளாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். மேலும் முகிலின் கழுத்தில் 6 முறை ஆழமாக வெட்டியதற்கான காயங்கள் இருந்தன. பிரமிளாவால் அவ்வாறு வெட்டியிருக்க முடியுமா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பிரமிளாவின் மூத்த மகன் வசந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார், பிரமிளாவிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். அப்போது தனது மூத்த மகன் வசந்தகுமார்தான், முகிலை வெட்டி கொன்றார் என்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த வசந்தகுமார் மற்றும் அவருடய நண்பர் கண்ணன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான முகில், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயுடன் தகராறு செய்து வந்தார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல், தனது தாயையும் வெட்டிக்கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். முகிலின் செயல்பாடுகளால் வசந்தகுமாருக்கு திருமணத்துக்கு வரன் கிடைக்காமல் தள்ளிபோனதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தகுமார், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் போதையில் வந்த முகில், தாயை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வீட்டில் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து வசந்தகுமாரிடம் பிரமிளா கூறி வருத்தப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், தனது நண்பர் கண்ணனுடன் வீட்டுக்கு வந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த முகிலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த முகில், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். வசந்தகுமாருக்கு பெண் பார்த்து இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் கொலை வழக்கில் அவர் சிறைக்கு சென்று விட்டால் திருமணம் நின்றுவிடும் என கருதிய பிரமிளா, மூத்த மகன் செய்த கொலையை மறைத்து, தானே மகனை கொன்றதாக கொலைப்பழியை ஏற்று போலீசில் சரணடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வசந்தகுமார், அவருடைய நண்பர் கண்ணன் மற்றும் மகனை தானே கொன்றதாக நாடகமாடியதாக பிரமிளா ஆகிய 3 பேரையும் வடபழனி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்