தேனி: தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்

சாய்பிரசாத் நண்பர்களுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.;

Update:2025-08-10 14:54 IST

தேனி,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது குடும்பத்துடன் கேரளாவில் தங்கி இருந்து ஏலத்தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சாய்பிரசாத் (வயது 14). இவன் ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

சாய்பிரசாத் சக நண்பர்களுடன் மாலை நேரத்தில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மாலையும் சாய்பிரசாத் நண்பர்களுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். கூடலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் தபேஷ் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு விளையாட்டு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தபேஸ், ஈட்டி எறிதல் பயிற்சிக்காக ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளி மைதானத்திற்கு வந்தார். அப்போது ஈட்டி எறிந்து பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தபேஷ் எறிந்த ஈட்டி எதிர்பாராத விதமாக அதே மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சாய்பிரசாத் தலையில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. உடனே அவன் வலியால் அலறி துடித்தான். இதைக்கண்ட அங்கிருந்த ஆசிரியர்கள், சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சாய்பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சாய்பிரசாத் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தலையில் ஈட்டி பாய்ந்து பலத்த காயத்துடன் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த துயர சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்