நெல்லையில் துப்பாக்கி சூடு; நடந்தது என்ன? - போலீசார் விளக்கம்

சிறப்பு காவல் படையைச் சார்ந்த ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது.;

Update:2025-07-29 11:10 IST

நெல்லை பாப்பாக்குடியில் நள்ளிரவு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளஞ்சிறார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் 2 பேரின் உயிரை காப்பாற்றவும், தற்காப்பிற்காகவும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பாக நெல்லை மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்டம், பாப்பாக்குடி காவல் நிலைய சரகம், இந்திரா காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட, சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார். வயது 22 என்பவர், தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள சமத்துவபுரத்தை சார்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளஞ்சிறார்கள், மேற்படி சக்திகுமார் என்பவரை, ரஸ்தாவூர் ஊருக்கு புறத்தில் உள்ள குளத்திற்கு வரவழைத்து, அவரிடம் தாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியில் மற்றும் போலீஸ்க்கு எப்படி தெரிவிக்கலாம் என்று ஆத்திரம் கொண்டு அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்படி நபர்கள், சக்திகுமாரை கொலை செய்யும் நோக்கில் கொடூரமாக தாக்க முற்பட்ட போது அவர் அங்கிருந்து தப்பித்து, தான் குடியிருக்கும் பகுதியில் உள்ள வேறொரு நபரின் வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்ட நிலையில், அவரை தேடி கொலை செய்ய அப்பகுதியில் அரிவாளுடன் சுற்றிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்று அவர்கள் அங்கு சென்ற போது, மேற்படி இளஞ்சிறார்கள் அரிவாளுடன் காவலர்களை தாக்க முற்பட்டபோது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியநிலையில், சிறப்பு காவல் படையைச் சார்ந்த ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளருக்கு தகவல் கிடைக்கப்பெற்று அவர் சம்வப இடத்திற்க்கு வந்து, இளஞ்சிறார்களை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இப்படி நடந்து கொள்ள கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

அபோது, மேற்படி இளஞ்சிறார்கள், உதவி ஆய்வாளரை நோக்கி ஆக்ரோஷத்துடன் அரிவாளால் வெட்ட முற்பட்ட போது, உதவி ஆய்வாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் உள்ள பெண்மணியின் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து அரிவாளால் துரத்திச் சென்ற இளஞ்சிறார்கள், மேற்படி நபரின் வீட்டின் கதவினை அரிவாள் கொண்டு ஆக்ரோசமாக தாக்கி சேதப்படுத்தி, அங்கிருந்த பெண்மணி மற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, உதவி ஆய்வாளரையும் அங்கு இருப்பவர்களையும், தாக்கும் முனைப்பில் செயல்பட்ட போது.

அவ்விடத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையில் அங்கு இருக்கும் நபர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், உதவி ஆய்வாளர் முருகன் அங்கிருந்த நபர்களின் உயிரினையும் உடமையையும் காப்பாற்றும் நோக்கத்திலும், தனது உயிரினை காப்பாற்றும் நோக்கத்துடனும் தற்காப்புக்காக தன்னிடம் இருந்த அலுவல் கைத்துப்பாக்கியினை எடுத்து இளஞ்சிறார்களை எச்சரிக்கும் நோக்கில் உள்ளிருந்து சுட்டார். அதனை தொடர்ந்து இளஞ்சிறார்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுதல் காவல் படையினர், சம்பவ இடத்தில் காயத்துடன் இருந்த இளைஞர் சக்திகுமார் என்பவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பகுதிகளில் இளஞ்சிறார்களை தேடிய போது. மார்பில் காயத்துடன் இளஞ்சிறார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு இளஞ்சிறார் கையப்படுத்தப்பட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, அப்பகுதியிலுள்ள நபரின் வீட்டினை சேதப்படுத்தி, காவல் அலுவலரை கொலை செய்ய முயற்சி செய்து கொடூர குற்றத்தில் ஈடுபட்ட, மேற்படி இரு இளஞ்சிறார்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1வது இளஞ்சிறார் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் சென்ற ஆண்டு, பெட்ரோல் குண்டு வீசியது உட்பட நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் மருத்துவமனையில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்து வரும். 2வது இளஞ்சிறார் மீது, சென்ற வருடம் ஒரு கொலை வழக்கும், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு உட்பட எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி இளஞ்சிறார்களின் சட்டவிரோத செயலினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதற்றத்துடனும், இருந்த நிலையில், உடனடியாக மாவட்ட எஸ்.பி. சம்பவ இடம் விரைந்து சென்று, கூடுதல் காவலர்களை பாதுகாப்பு அலுவலில் ஈடுபடுத்த உத்தரவிட்டதின்பேரில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்