12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.;
சென்னை,
மத்திய வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் சற்று வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதனால், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 12 மாவட்டங்களில் இன்று அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.