சென்னையில் குளுகுளு குற்றால சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் மத்தியில் அந்தமான் பகுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்தில் கேரளாவிலும் தொடங்குவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பெரிய அளவில் பயனளிக்காது என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடமேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவை வழக்கமாக பெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் 7 நாட்கள் முன்னதாக மே மாதம் 25-ந்தேதியே ஆரம்பமானது. இந்த ஆண்டு இயல்பைவிட தென்மேற்கு பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.
அதை நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் ஜூன் மாதம் 7 சதவீதம் அளவுக்கு தென்மேற்கு பருவமழை அதிகமாக இருந்தபோதும், ஜூலை மாதத்தில் அது 7 சதவீதம் குறைந்துபோனது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தபோதும், ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பெருமளவில் மழை பொழிவு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டாலும், இன்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றால சாரல் போல் சிறு சிறு துளிகளாக மழை தூறிக் கொண்டே இருந்தது.
குளுகுளு சூழலும் குற்றாலம் போல் ரம்மியமாக இருந்ததால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்றவர்களும் மழை கோட்டு அணியாமல், துளித் துளியாக விழுந்த சாரல் மழையில் நனைந்தபடி உற்சாகமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.