போலீஸ் வேனில் வைத்தே தகாத வார்த்தையில் திட்டி போலீசாரை தாக்கிய கைதிகள் - வீடியோ வைரல்
கஞ்சா கடத்தலை மறைப்பதற்காக கைதிகள் நடத்திய கலவர நாடகம் வீடியோ காட்சியாக வைரலாகி உள்ளது.;
சென்னை,
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் 26 பேரை ஒரு போலீஸ் பஸ்சில் ஏற்றி, எழும்பூர் கோர்ட்டுக்கு நேற்றுமுன்தினம் போலீசார் அழைத்து வந்தனர். கைதிகள் அழைத்து வரப்பட்ட போலீஸ் பஸ்சை, நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வந்தார். இவர்களுக்கு பாதுகாப்புக்காக செந்தில், பாபு, சங்கர் என்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 30 போலீசார், இன்னொரு போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர்.
இந்த கைதிகள் எழும்பூரில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் நேற்றுமுன்தினம் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்து, இரவு 8 மணியளவில், கைதிகள் ஏற்றப்பட்ட பஸ் மீண்டும் புழல் சிறை நோக்கி புறப்பட்டு சென்றது. பாதுகாப்பு போலீசாரும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். கைதிகள் அனைவரும், போகும் வழியில் ஒரே ஆட்டம்பாட்டத்துடன் அமர்க்களமாக சென்றனர்.
கைதிகளை ஏற்றி வந்த பஸ், வியாசர்பாடி பகுதியில் செல்லும்போது, கைதிகள் திடீரென பஸ்சின் பக்கவாட்டில் அடித்தப்படி ரகளையில் ஈடுபட்டனர். உடனே பஸ்சை ஓட்டிச் சென்ற போலீஸ்காரர் சாலையோரமாக நிறுத்தினார்.
ரகளையில் ஈடுபட்ட கைதிகளை போலீசார் சமாதானப்படுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், கைதிகள் இருந்த பஸ்சுக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசினார்கள். இதை போலீசார் பார்த்துவிட்டனர். கஞ்சா பொட்டலங்களை கைப்பற்ற முயற்சித்தார்கள். கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றாமல் இருக்க கைதிகள், பெரிய கலவர நாடகத்தை நடத்தினார்கள்.
போலீசாருடன் கைதிகள் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக திட்டி மோதலில் ஈடுபட்டனர். போலீசார் மீது தாக்குதல் நடந்தது. கைதிகள் வந்த பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த விளக்குகளும் நொறுக்கப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை மறைப்பதற்காக கைதிகள் நடத்திய இந்த கலவர நாடகத்தை பார்த்ததும் பொதுமக்கள் திரண்டனர். பின்னர், கைதிகளை போலீசார் சமாதானப்படுத்தி, அங்கிருந்து மீண்டும் பஸ்சில் அழைத்து சென்றுவிட்டனர்.
இரவு 10 மணியளவில் கைதிகள் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து காவலுக்கு சென்ற போலீசார், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. உரிய புகாரும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று கைதிகள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட காட்சி, வீடியோ காட்சியாக சமூகவலைதளங்களில் வைரலானது. கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்துவதும், ஆபாசமாக திட்டுவதும் வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தன. இதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். கைதிகளுடன் காவலுக்கு சென்ற போலீசாருடன், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறில் ஈடுபட்ட கைதிகளின் பெயர் பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய புகார் கொடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.