இரண்டாவது நாளாக எகிறிய தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை எட்டி இருந்தது.;
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கி உள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, நேற்று முன்தினம் ரூ.75 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை நேற்றும் உயர்ந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-ஐ தொட்டதுதான் புதிய உச்சமாக அப்போது இருந்தது. இதே நிலையை நேற்று முன்தினமும் தொட்டது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தை தங்கம் எட்டி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 70 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 470க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா மீது வரி விதிப்பதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால், தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
08.08.2025 ஒரு சவரன் ரூ. 75,760 (இன்று)
07.08.2025 ஒரு சவரன் ரூ. 75,200 (நேற்று)
06.08.2025 ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 ஒரு சவரன் ரூ. 74,960
04.08.2025 ஒரு சவரன் ரூ. 74,360