"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.." பாடல் பாடி தன் பழைய நினைவுகளை பகிர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்

அஜித்தின் ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் பரத்வாஜ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.;

Update:2025-08-02 18:32 IST

தென்காசி பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 123ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் பரத்வாஜ் கலந்து கொண்டார். இவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பேசிய பரத்வாஜ், பாடல் பாடி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்து பாடிய 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...' பாடலை பாடினார். பின்பு பேசிய அவர், "நான் இரவணசமுத்திரம் பகுதியில் பிறந்தவன். ஆனால் டெல்லியில் வளர்ந்தவன். இரண்டுக்கும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் இருக்கிறது. டெல்லியில் இருந்து இங்கு வரும்போதெல்லாம் இரயில்களில் தான் வருவோம்" என்றார். பின்பு மீண்டும் அவர் இசையமைத்து பாடிய 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...' பாடலை பாடினார். பின்பு அவர் பேசுகையில், "இந்த பாட்டை கேட்டால் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள். நான் சென்னையில் தான் இருந்தேன். இப்போது கிராமத்திற்கு வந்துவிட்டேன். இங்கு என்னுடைய சினிமா துறையை ஞாபகப்படுத்தி பேசினார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இந்த கிராமத்திற்கு கலை வடிவில் முன்னேற்றம் அடைய என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதப் பிரிவில் படித்தார். அதன் பிறகு டெல்லி இசைப் பள்ளியில் மேற்கத்திய இசையைக் கற்றார். அதன் பிறகு அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்திலும் சில நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இசைத் துறைதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்து சென்னைக்கு வந்தார்.இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் என்று இசையமைத்துக் கொண்டிருந்தவர் 1994ல் வெளியான 'சொகசு சூடா தரமா' என்னும் தெலுங்குப் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளர் ஆனார். மேலும் சில தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தார்.

கே.பாலசந்தரின் சீடரான சரண், 1998-ல் வெளியான 'காதல் மன்னன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் பரத்வாஜ். அஜித்தின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்திய 'காதல் மன்னன்' படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'உன்னைப் பார்த்த பின்பு நான்' என்ற காதல் பாடல் இளைஞர்களின் தேசிய கீதமானது. இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் பாடலாகத் திகழ்கிறது.

இயக்குநர் சேரனுடன் இணைந்து அவர் பணியாற்றிய 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்' இரண்டிலும் மிகச் சிறந்த பாடல்கள் இடம்பெற்றன. 'ஆட்டோகிராப்' படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த தன்னம்பிக்கைப் பாடல்களில் ஒன்று. சசியுடன் அவர் பணியாற்றிய 'ரோஜாக்கூட்டம்' படத்திலும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த காதல் பாடல்கள் அமைந்திருந்தன.

இயக்குநர் ஹரியின் அறிமுகப் படமான 'தமிழ்' படத்துக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். ஹரியின் 'ஐயா' படத்தில் இடம்பெற்ற 'ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்னும் பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடலானது. தங்கர்பச்சானுடன் இணைந்து 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற படங்களிலும் சுந்தர்.சியுடன் 'அரண்மனை' படத்திலும் சிறந்த பாடல்களை வழங்கினார். ஜெமினி', 'ஆட்டோகிராப்' ஆகிய இரண்டு படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் பரத்வாஜ்.

Tags:    

மேலும் செய்திகள்