"பார்கிங்" தேசிய விருது: நெகிழ்ச்சியில் இயக்குநர் ராம்குமார் வெளியிட்ட வீடியோ

‘பார்கிங்’ படத்தின் தேசிய விருது அங்கீகாரத்தை பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கு கடத்துவேன் என்று இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.;

Update:2025-08-02 15:55 IST

இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு பார்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். 2023ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் நடித்திருந்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பார்க்கிங் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதுடன், சிறந்த திரைக் கதைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் காரை பார்க் செய்வது தொடர்பாக எழும் மோதல்களே படத்தின் கதை. பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

3 விருதுகள் வென்றுள்ளதால் பார்கிங் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பார்கிங் திரைப்படம் தேசிய விருதுகள் வரை சென்றிருப்பது மகிழ்ச்சி. இதற்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி. பார்கிங் வெளியானபோது வெள்ளம் வந்தது. அந்த சூழலிலும் திரையரங்கில் பார்த்து படத்தைப் பற்றி பேசி, ஓடிடியில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு தேசிய விருது என்ற அங்கீகாரம் பெற்றிருப்பதற்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தில் நடித்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கொடுத்த ஆதரவுதான் இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. ஒரு சிறிய ஐடியாவை படமாக மாற்ற முடியும் என நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் ஷோல்ஜர்ஸ் பேக்டரி, பேஸன் ஸ்டூடியோஸுக்கு நன்றி . மேலும் இந்த நம்பமுடியாத அங்கீகாரத்தை ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கும் கடத்துவேன்" என பேசியிருந்தார்.

இவர் இப்போது சிம்புவின் 49வது திரைப்படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்