தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார்
திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப்.;
சென்னை,
தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார். அவருக்கு வயது 71 . தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்கள் சிரிக்க வைத்தார்.
சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகர் என்பதை தாண்டி இசை கலைஞராகவும் இன்னொரு பரிமாணத்தில் மதன் பாப் மிளிர்ந்தார். மதன் அண்ட் பாபு என்ற பெயரில் இசை குழு ஒன்றையும் நடத்தி வந்தார். இசை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற பிறகு கிருஷ்ண மூர்த்தி என்ற அவரது உண்மையான பெயரை மறந்து போய் மதன்பாப் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் அவர் ஒருங்கிணைத்து நடத்தி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட மிகப்பெரிய இசை ஜாம்பவான்களும் இவரது குழுவில் அங்கம் வகித்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இசைக் கலைஞராக இருந்த தன்னை நடிகனாக மாற்றியது கே பாலச்சந்தர் என்று செல்லும் இடமெங்கும் மதன்பாப் பெருமையுடன் குறிப்பிடுவது வழக்கம்.
சினிமாவில் பல ஆண்டு ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வந்த மதன்பாபின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது மதன்பாபின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் இரங்கல்களை பதிவு செய்து வருகிறார்கள்.