"இன்னும் 20 ஆண்டுகள் நம்மை சிரிக்க வைத்திருக்கலாம்" - மதுரை முத்து
நடிகர் மதுரை முத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்;
சென்னை,
தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் நேற்று மாலை காலமானநிலையில், நடிகர் மதுரை முத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
''அவர் சிரித்தாலே எல்லோருக்கும் அது தொற்றிக்கொள்ளும் . அவ்வளவு ஒரு யுனிக்கான ஐகான் அவர்.
நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதல் நீதிபதியாக இருந்தவர். அவருடன் 7 ஆண்டுகாலம் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பயணித்தேன். அதன் பின்பு 4 ஆண்டுகள் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அவருடன் பயணித்தேன்.
இயக்குனர் ராஜ் குமார் எப்படி என்னை அறிமுகப்படுத்தினாரோ அதேபோல மதுரை முத்து எங்கள் சொத்து என்று சொல்லி முதல் எபிசோடில் ஆரம்பித்தார். அவருடைய வாய் முகூர்த்தம் எனக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.
எங்களை மாதிரி கிராம புறத்தில் இருந்து வரும் கலைஞர்களை உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார். இப்ப வரைக்கும் என்னை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தவர். இன்னும் 20 ஆண்டுகள் நம்மை அவர் சிரிக்க வைத்திருக்கலாம். அதற்குள் எங்களையும் சிரிக்க வைக்க வாருங்கள் என்று சொல்லி இறைவன் அழைத்துக்கொண்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' இவ்வாறு கூறி இருக்கிறார்.
தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71 . தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.