ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் ; அமைச்சர் தகவல்

கிராம ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையோடு நிரபப்படும் என்று அமைச்சர் கூறினார்;

Update:2025-08-07 19:52 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாயக்கூடம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.80 லட்சம் செலவில் சமுதாயக்கூடம், போக்குவரத்து நகரில் ரூ.10 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், கலிக்கம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது,

தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளாக அரசின் திட்டங்கள் அனைத்தும் கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் மக்களுக்கு வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் கனவு இல்லத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்படடு எல்லோருக்கும் வீடுகள் என்ற நிலையை உருவாக்குவதே கலைஞர் கனவு இல்லத்தின் நோக்கமாகும். நகராட்சி நிர்வாக துறையின் மூலம் 2538 காலி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார். இதேபோல் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படை தன்மையோடு எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் விரைவில் நிரப்பப்படும்”என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்