கோவையில் “கிங்டம்” படத்தை எதிர்த்து போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்திருந்தார்.;
சென்னை,
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் உள்ளதாலும் தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாலும் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்தார். இதனால் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பாதுகாப்பு கோரி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடெக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின்போது “சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.‘கிங்டம்’ படம் திரையிட இடையூறு செய்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கோவை தனியார் வணிக வளாகத்தில் ‘கிங்டம்’ படத்தை எதிர்த்து போராடிய நாதகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.