தமிழக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை தேவை: ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கை
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கின்றன.;
சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கூடுதல் வரிவிதிப்பு இந்திய ஏற்றுமதிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடைந்திருக்கின்ற, ஏற்றுமதி தொழிலை அதிகமாக தன்னகத்தே கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டிற்கு மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்திலிருந்து ஜவுளி சார்ந்த ஏற்றுமதியும், வாகன உதிரி பாகங்கள், மருந்து வகைகள் மற்றும் தோல் சார்ந்த ஏற்றுமதியும் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கின்றன.
ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் சிரமப்படும் என்பதை தாண்டி லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் உண்டு. அதனால் அமெரிக்காவின் வரி விதிப்பை மத்திய அரசு பார்த்து கொள்ளும் என தமிழ்நாடு வேடிக்கை பார்க்க முடியாது. தமிழகத்தில் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து உடனடி தீர்வுகளை எதிர்பார்ப்பது போல சரிசமமாக தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிற முதல்-அமைச்சர் விரைவில் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்களை காப்பாற்ற நல்ல முயற்சிகளை எடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தமிழக முதல்-அமைச்சர் தாமதம் இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக ஏற்றுமதி சார்ந்த தொழில் அமைப்பின் பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுடைய கருத்துகளை கேட்டு தீர்வை நோக்கி பயணிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.