தி.மு.க. ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2025-08-07 18:18 IST

கோப்புப்படம் 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் தி.மு.க. அரசு, 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு’ என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று தி.மு.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம். இதனை நி%பிக்கும் வகையில் தி.மு.க. அரசு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறது.

இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பதும்; இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதும், ஒரு மாய விளம்பரம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாமே,

· முதல் முன்கூட்டிய மதிப்பீடு,

· இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு,

· தற்காலிக மதிப்பீடு,

· முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு,

· இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு,

· மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என, பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும். இந்தப் புள்ளி விபரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடையும் என்பதே உண்மை. இந்த வகையில் கடந்த 17.3.2025 அன்று தமிழ்நாட்டின் வளர்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69% என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19% என்று உயர்ந்துள்ளது.

உடனே தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு, இரு இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மார்தட்டிக்கொண்டு பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றதை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை. இதுதவிர, இதே புள்ளி விபரத்தில் 2022-23 ஆண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி அதாவது 17.3.2025 கணிப்பின்படி 8.13% என்று இருந்தது. 1.8.2025 கணிப்பில் 6.17% என குறைந்துவிட்டது. இதுதான் 2022-23க்கான இறுதி மதிப்பீடு. இதுபற்றி தி.மு.க. அரசு எதுவும் பேசாது. அந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏற்கெனவே செய்த மதிப்பீட்டைவிட 6.17% என குறைந்து போனது. எனவே, இது இறுதியான கணிப்பு அல்ல.

இவர்களுக்கு சாதகமான ஒரு புள்ளி விபரம் வந்தவுடன், 2030-ல் இவர்கள் கூறியபடி தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறார்கள். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, இவர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய். இந்தியாவின் பொருளாதார வல்லுநர் டாக்டர் ரங்கராஜன், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்து வருபவர். தொடர்ந்து 14% வளர்ச்சி பெற்றால்தான் 2030-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறார். ஆனால், தி.மு.க. ஆட்சியில் 2021-22 வளர்ச்சி விகிதம் 7.89%, 2022-23ல் 6.17%, 2023-24ல் 9.26%, 2024-25ல் கணிப்பு 11.19%.

2023-24, 2024-25 புள்ளி விபரங்கள் பின் கணிப்புகளில் மாறலாம். இந்த நிலையில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எப்படி எட்ட முடியும்? ஆனால், தி.மு.க. அரசு தைரியமாக இந்தப் பொய்யை தொடர்ந்து சொல்லி வருகிறது. இப்படி பொய் பேசி மக்களை மயக்கி ஏமாற்றுவதே இவர்களின் வாடிக்கை. 'நீட்’ தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்பது போல் ஒரு டிரில்லியன் பொருளாதார ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். அவை, இறுதி நிலையை அடையும் போதுதான் உண்மை விளங்கும். உண்மையில், தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, முதற்கட்ட, இரண்டாம் கட்ட பொருளாதார புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு, இனியாவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

ஒரு மாநில உற்பத்தி மதிப்பு என்பது விவசாயம் சார்ந்த துறைகள், தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பைக் காட்டும். தமிழ்நாடு போன்ற தொழில் மற்றும் சேவைத் தொழில் உள்ள மாநிலங்களில் உற்பத்தி மதிப்பு உயர்ந்தாலும், உண்மையான தனிமனித வருமானம் உயர்ந்ததாகக் கருத முடியாது. உதாரணமாக கார் உற்பத்தி, கைபேசி உற்பத்தி, வங்கிக் கடன், இன்சூரன்ஸ் போன்றவை அதிக மதிப்பு காட்டினாலும், அதன் பலன் மக்களை பரவலாக சென்றடையாது.

ஏனெனில், பொருளாதாரத் துறை கணக்கிடும் தனி மனித வருவாய் - பொருளாதார உற்பத்தி மதிப்பை, மக்கள் தொகையால் வகுத்துப் பெறுவது ஆகும். இது, ஒரு மதிப்பீடுதான். கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கூட தனிநபர் வருமானம் தமிழ்நாட்டைவிட கூடுதலாக உள்ளது. எனவே, இந்த மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் உண்மையில் உயர்ந்துவிட்டதா என்றால், இல்லை என்பதுதான் கள நிலவரம்.

அதிக வளர்ச்சியுற்றதாகக் கூறப்படும் 2024-25ல், விவசாயம் வளர்ச்சி அடையவில்லை என்பதைவிட எதிர்மறை வளர்ச்சியே உள்ளது. உற்பத்தி தொழில் சராசரி வளர்ச்சிதான். அதிக வளர்ச்சி எந்தத் துறையில் உள்ளது என்பதைப் பார்த்தால், உணவகம், கட்டுமானம், விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு சேவை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவை, ரியல் எஸ்டேட் ஆகியவையே ஆகும். இந்தத் துறைகள் வளர்ச்சி அடைவதற்கு தி.மு.க. அரசு என்ன செய்துள்ளது?

கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில், சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் போன்றவையே காரணம். எனவே, தி.மு.க. பெருமை பீற்றிக் கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஆனாலும், தமிழ்நாடு இந்திய அளவில் உள்ள சராசரி வளர்ச்சியைவிட, எப்போதுமே அதிக வளர்ச்சி பெற்றுவருகிறது. குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியைப் பெற முடியாது. அதற்கு அடித்தளம் போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதனாலேயே தமிழ்நாடு சரிவில்லாமல் வளர்ச்சி பெறுகிறது.

எனவே, பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட தி.மு.க. ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை என்பதாலேயே இதனைக் கூறுகிறோம்.

· உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். ஏனென்றால், நீர் ஆதாரம் பராமரிக்கப்படவில்லை.

· விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை.

· கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.

· நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.

· எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

· சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர்.

· தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், தி.மு.க.வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்