9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: தி.மலை, திருப்பத்தூர், வேலூர்க்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.;
சென்னை,
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளன. இதன் காரணமாக வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை நாளையும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.