பி.எட். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 16-ந்தேதி தொடக்கம்


பி.எட். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 16-ந்தேதி தொடக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Sep 2024 3:08 PM GMT (Updated: 13 Sep 2024 3:09 PM GMT)

பி.எட். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் 16-ந்தேதி தொடங்க உள்ளது.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை பி.எட். முதலாமாண்டு படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வரும் 16-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு(B.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai -15" என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 16.09.2024

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 26.09.2024

தொடர்புஎண்: 044 – 24343106/24342911"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story