மீண்டும் வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை
வெப்பத்தின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் (ஜூன்) தொடங்கியது. பின்னர் அது படிபடியாக குறைந்து, வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் காற்று சுழற்சி சாதகமாக அமைந்துள்ளதாலும், அதிலும் குறிப்பாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டாலும் மீண்டும் தென் மேற்கு பருவமழையும், வெப்பசலன மழையும் இன்று (புதன்கிழமை) முதல் வேகம் எடுக்கிறது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்பட வட மாவட்டங்களில் இன்று முதல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 6 நாட்களுக்கு மாலை, இரவு அல்லது நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும், வருகிற 18, 19 மற்றும் 20-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை வரை கூட பதிவாகும் என்றும், இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.