இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-04 05:30 IST

கோப்புப்படம்


தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை, வெப்பசலன மழை கடந்த சில மாதங்களாக கைக்கொடுத்து வருகிறது. இடையில் பல நாட்கள் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதேபோல், இன்று (திங்கட்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்க்படுகிறது.

நாளை மறுதினம் (புதன்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதில் அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிககனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை வரை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்