கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-07-28 12:28 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இளைஞர்களின் எதிர் காலத்தை நிர்ணயிப்பதில் உயர் கல்வி முக்கிய அங்கமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உயர் கல்வியை மாணவ, மாணவியருக்கு அளிப்பதில் முக்கியப் பங்காற்றுபவர்கள் கல்லூரி ஆசிரியர்கள். எனவே, கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கற்பிக்கும் பணியை மேற்கொள்வார்கள். மாணவ, மாணவியருக்கும் தரமான கல்வி கிடைக்க வாய்ப்பு ஏற்படுவதோடு, நல்ல வேலைவாய்ப்பிளை பெறவும் வழிவகுக்கும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் பொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. இதில் 2025-2026 ஆம் ஆண்டு மட்டும் 15 புதியக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதோடு, 253 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதிதாக பணியமர்த்தப்படவில்லை. என்பதுதான் வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 14,000 என்று இருக்கின்ற நிலையில், வெறும் 5,000 உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட 8,000 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 25,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் ஆண்டிற்கு 11 மாதச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்கள் அனைவருமே முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் போன்றவற்றை படித்துள்ளதோடு, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படாததோடு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியமும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, இவர்கள் எல்லாம் விரக்தியின் விளிப்பில் உள்ளனர்.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, இதற்கான தேர்வு இந்த மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்மீது நடவடிக்கை மேற்கொண்டபின், உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தை தொடரலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து உதவி பேராசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மேலும் 500 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மிகப் பெரிய குழப்பத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அவ்வப்போது முறையாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததும், நீண்ட காலமாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததும் கடும் கண்டனத்திற்குரியது.

புதிய கல்லூரிகளும், புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கினால் மட்டும் போதாது. அதற்கான ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கல்வி மாணவ, மாணவியரை சென்றடையும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் தி.மு.க. அரசின் உறுதியுற்ற தன்மையின் காரணமாக, மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் உதவிப் பேராசிரியர் பணிக்காக காந்திருப்பவர்களும், கவுரவ விரிவுரையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக மாணவ மாணவியர் சேர்க்கை சென்ற ஆண்டை ஒப்பிடும்போது 16,000 ஆக குறைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவு மாணவியரின் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்களை நியமிக்கவும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்