திராவிட மாடல் அரசு செவிலியர்களுக்கு எப்போதும் பக்க பலமாக நிற்கும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.;

Update:2025-07-28 15:07 IST

சென்னை,

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், 22 செவிலியர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இலட்சினை (Logo) மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;

"தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் (Tamil Nadu Nursing and Midwives Council) நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

இங்கே வருகை தந்திருக்கக்கூடிய ஒவ்வொரு செவிலியருடைய முகத்தை பார்க்கின்ற போது மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை உணர்வும், பாதுகாப்பு உணர்வும் எனக்கு ஏற்படுகின்றது. ஏனென்றால், உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்தத்தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பாக இங்கு வந்திருக்கக்கூடிய செவிலியர்கள் உங்களுடைய முகத்தை தான் அவர்கள் பார்க்கின்றார்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். பூரிப்பு அடைகின்றேன்.

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் (Tamil Nadu Nurses and Midwives Council) இன்றைக்கு 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றது. அரசியல் சார்பற்ற, ஒரு கவுன்சிலை ஓராண்டு நடத்துவதே சிரமம். ஆனால், நீங்கள் நூறு ஆண்டுகளை கடந்து இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகிலேயே மூன்றாவதாக நூற்றாண்டு காணுகின்ற செவிலியர் கவுன்சில் என்ற பெருமை நம்முடைய தமிழ்நாட்டின் செவிலியர் கவுன்சிலுக்கு உண்டு. எனவே, இந்த கவுன்சில் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இது நம்முடைய இந்தியாவிற்கே மிகப்பெரிய பெருமையாகத் திகழ்கின்றது.

நோய்கள் பரவாமல் இருக்க, தடுப்பூசி மிக, மிக அவசியம். ஆனால், தடுப்பூசி போடச் சென்றால், டாக்டர்களையும் செவிலியர்களையும் துரத்திய காலம் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட மக்களிடம் பக்குவமாகப் பேசி, அவர்களுக்கு புரிய வைத்து, தடுப்பூசிப் போட்டு பல நோய்களை பரவாமல் தடுத்தப் பெருமை இங்கே கூடியிருக்கிற செவிலியர் சமூகத்துக்கு தான் உண்டு.

பல நோய்கள் பரவி தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் அதையெல்லாம் முன்களப் பணியாளர்களாக நின்று தடுத்தது செவிலியர் சமூகத்தை சேர்ந்த நீங்கள் தான். குறிப்பாக கொரோனா காலத்தில் நீங்கள் ஆற்றிய பணியை எந்த காலத்திலும் யாராலும், மறுக்க முடியாது, மறக்க முடியாது. பல செவிலியர்கள், வீட்டை விட்டு, குழந்தைகளை விட்டு, பெற்றோர்களை கூட சந்திக்காமல், இரவு, பகல் பார்க்காமல் நீங்கள் பணி செய்தீர்கள். இன்னும் சொல்லப் போனால், ஒரு சில செவிலியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இன்னுயிரைக் கூட தந்தீர்கள்.

இந்த கவுன்சில் உருவாக காரணமான இந்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றும் போது, அங்கே உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் சொன்ன வார்த்தை இது, "Trained nurses are the cornerstone of modern public health" என்று செவிலியர் பணியைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறார். அதாவது, "பயிற்சி பெற்ற செவிலியர்கள் தான் நவீன பொதுச் சுகாதாரத்தின் ஆதாரம்" என்று சொன்னார்.

பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. அதற்கு இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வெற்றிக்கு காரணம் உங்களுடைய பங்களிப்பு தான். நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். இன்றைக்கு நூற்றாண்டு காண்கின்ற இந்த செவிலியர் கவுன்சில் மேலும் பல ஆண்டுகள் செயல்பட்டு, மக்கள் பணியாற்றிட வேண்டும், தமிழ்நாட்டின் சுகாதாரத்தை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்