நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.;

Update:2025-07-25 16:06 IST

புதுடெல்லி,

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை.இந்த நாடாளுமன்ற முடக்கம் இன்றும் 5-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில் சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும், நாடாளுமன்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பிரச்சினைகளுக்கு அமளியின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தின் மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை 28 ஆம் தேதி இந்த விவாதம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டியுள்ளது. இதன்மூலம், திங்கட்கிழமை முதல் நாடாளுமன்றத்தின் அலுவல் பணிகள் சுமுகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்