மணிப்பூர்: போலீசாரின் கூட்டு தேடுதல் வேட்டையில் ஆயுத குவியல்கள் பறிமுதல்
பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.;
இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் பலியானார்கள். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், அவ்வப்போது வன்முறை ஏற்படுவதும் பின்னர் போலீசார் நடவடிக்கை எடுத்து நிலைமை சரி செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் போலீசார், அசாம் ரைபிள் படையினர் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் இணைந்து கடந்த சில நாட்களாக மணிப்பூரின் மலை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பெரிய அளவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போர் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், ஏ.கே. ரக துப்பாக்கிகளும், இன்சாஸ், எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள், ஸ்னிப்பர் வகை துப்பாக்கிகள் (தொலைநோக்கியுடன் கூடிய), எம்4 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று சிறிய அளவிலான கைத்துப்பாக்கிகள், பல்வேறு வகையிலான ரைபிள்கள், நாட்டு துப்பாக்கிகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், பைனாகுலர், தொலைதொடர்பு சாதனங்கள், தொலைநோக்கி ஒன்று என பல்வேறு வகையான பொருட்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான மற்றும் பாதுகாப்பான மணிப்பூர் அமைவதற்கு மாநில போலீசார் மீண்டும் உறுதியளித்து உள்ளனர். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நடவடிக்கை அல்லது சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல் எதுவும் இருப்பின் அதுபற்றி முறையாக அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும் பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.