ராஜஸ்தானில் மீண்டும் விபத்து; பள்ளி நுழைவுவாயில் இடிந்து விழுந்து மாணவன் பலி - ஆசிரியர் படுகாயம்
பலத்த காற்று காரணமாக பள்ளியின் நுழைவுவாயில் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஒன்றி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் மீண்டும் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராம்கர் பகுதியில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் நுழைவுவாயில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 வயது மாணவன் உயிரிழந்த நிலையில், ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தார்.
பலத்த காற்று காரணமாக நுழைவுவாயில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளின் உறுதித்தன்மையை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகளால் எந்த ஒரு குழந்தையும் உயிரிழக்கக் கூடாது என்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.