சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் விழா: கமல், வெற்றிமாறன் பங்கேற்பு
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டு நிகழ்ச்சியில் கமல், இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளனர்.;
சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது.
அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
அகரம் விதைத் திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வி வாய்ப்பு பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 8,000 பேர் ஒன்றுகூடும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல், இயக்குநர் வெற்றிமாறன், சிவக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அண்மையில் தாம் நடித்த 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த பத்து கோடி ரூபாயை 'அகரம் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக அளித்துள்ளார் சூர்யா.
நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், " இந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்கும் எனக்கே இவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்போது, அகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதை வழிநடத்தும் சூர்யா மற்றும் அவரது குழுவினருக்கு எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் என்பது தெரிகிறது.இந்த மேடையில் ஒவ்வொரு மாணவரும் வந்து அவர்களது பயணத்தையும் இன்று அவர்கள் வந்தடைந்துள்ள இடத்தையும் பற்றிச் சொல்லும்போது, 'இந்த அகரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும்' என்பதைத்தான் நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
விதை என்ற ஒரு திட்டம், அதன்மூலம் இளைஞர்களுக்கு கல்வின் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை, அதை யாரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தெளிவும் சூர்யாவுக்கு இருந்திருக்கிறது. தன்னார்வலர்களாக இருப்பது கடினமான ஒன்று. எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் நம் நேரத்தைக் கொடுப்பது என்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அகரம் இன்னும் வலிமையாக செயல்பட்டு சூர்யாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கமல், " சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். திரைப்படத்தின் டீஸர், டிரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் அகரம் நிகழ்ச்சியில் எனக்கு கிடைக்கிறது" என்றார்.