விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்..? - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்

image courtesy:PTI
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் அடித்தார்.
ராஞ்சி,
ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதம் (135 ரன், 120 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்), ரோகித் சர்மா (57 ரன்), கேப்டன் கே.எல். ராகுல் (60 ரன்) ஆகியோரது அரைசதங்களால் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 332 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக விராட் மற்றும் ரோகித் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
அந்த சூழலில் தற்போது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க தொடங்கி விட்டனர். இதனால் 2027-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர்களுக்கு இடம் உண்டா? என்ற விவாதம் இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் கூறுகையில், “இந்திய அணியில் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்ற விவாதம் எப்போதும் இருந்து கொண்டு இருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. அவர் அருமையாக பேட்டிங் செய்கிறார். அப்படி இருக்கும் போது அவரது எதிர்காலம் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? அவர் பேட்டிங் செய்யும் விதம் மற்றும் உடல்தகுதி விஷயத்தில் கேள்விக்கே இடமில்லை.
கோலியும், ரோகித் சர்மாவும் அற்புதமான வீரர்கள். அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை அவர்கள் அணிக்கு வந்து பயிற்சியை தொடங்கியதும் நாங்கள் உற்சாகமாகி விடுகிறோம். தங்களது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது உதவிகரமாக இருக்கிறது. 2027-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பாக பேசப்படுவது குறித்து நினைப்பது கூட கிடையாது” என்று கூறினார்.






