மேஜர் லீக் கிரிக்கெட்; மழையால் தடைப்பட்ட ஆட்டம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வாஷிங்டன் பிரீடம்

Image Courtesy: @WSHFreedom / @MLCricket
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 2வது தகுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டல்லாஸ்,
6 அணிகள் பங்கேற்றுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், எம்.ஐ.நியூயார்க் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. சியாட்டில் ஆர்காஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், இந்த தொடரின் முதலாவது தகுதி சுற்று நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வாஷிங்டன் பிரீடம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்னர் அங்கு மழை பெய்தது.
மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த வாஷிங்டன் பிரீடம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2வது இடத்தில் இருந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இன்று (இந்திய நேரப்படி நாளை) நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதுகின்றன்.
இந்த ஆட்டத்தில் தோல்வி காணும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி 2வது தகுதி சுற்றில் சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும். தொடர்ந்து 2வது தகுதி சுற்றில் வெற்றி கானும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.