ஐ.பி.எல். ஏலம்: அடிப்படை விலை ரூ.2 கோடியில் இரு இந்தியர்கள் மட்டுமே.. யார் - யார் தெரியுமா..?

ஐ.பி.எல். மினி ஏலம் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வீரர்களுக்கான அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சம் என்றும் அதிகபட்சம் ரூ. 2 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஆடிய திறமையான வீரர்கள் பலரும் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியிலிருந்தே தொடங்கும்.
இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய் ஆகிய இரு இந்திய வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 வீரர்கள் இப்பிரிவில் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






