இலங்கைக்கு நிவாரண உதவி அளிக்க இந்திய வான்வெளியை அனுமதிக்க மறுப்பா...? பொய் செய்தியை பரப்பிய பாகிஸ்தான் ஊடகங்கள்


இலங்கைக்கு நிவாரண உதவி அளிக்க இந்திய வான்வெளியை அனுமதிக்க மறுப்பா...? பொய் செய்தியை பரப்பிய பாகிஸ்தான் ஊடகங்கள்
x

பொய்யான, அடிப்படையற்ற மற்றும் தவறான தகவலை பரப்ப பாகிஸ்தான் ஊடகங்கள் முயற்சிக்கின்றன என இந்தியா கூறியுள்ளது.

கராச்சி,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. புயல் பாதிப்பு செய்தியை தொடர்ந்து, 2 இந்திய கடற்படையின் கப்பல்களில் 9.5 டன்கள் நிவாரண பொருட்கள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதுதவிர, இந்திய விமான படையின் 3 விமானங்கள் 31.5 டன்கள் அளவிலான நிவாரண பொருட்களையும், இதன்பின்னர் சுகன்யா கப்பலில் 12 டன்கள் நிவாரண பொருட்கள் என மொத்தம் 53 டன்கள் நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன.

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, புயலால் பாதிப்படைந்த இலங்கைக்கு பாகிஸ்தானும் உதவ முன் வந்துள்ளது. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் நிவாரண பொருட்களை விமானத்தில் கொண்டு சென்றது.

ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக, இந்தியா தன்னுடைய வான் பரப்பை பயன்படுத்த அனுமதி தரவில்லை என பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி இந்தியா தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், டிசம்பர் 1-ந்தேதி இலங்கைக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக, இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி, பாகிஸ்தான் அனுமதி கோரியிருந்தது. இதனை குறுகிய காலத்திற்குள் பரிசீலித்த இந்தியா, 4 மணிநேரத்திற்குள் பரிசீலனையை முடித்து, மாலை 5.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு ஒப்புதல் அளித்தது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பவும், அடிப்படையற்ற மற்றும் தவறான தகவலை பரப்பவும் பாகிஸ்தான் ஊடகங்கள் முயற்சிக்கின்றன என கூறி அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்து உள்ளது.

1 More update

Next Story