22 ஆண்டுகளில் இல்லாத வகையில்... சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது.
சிங்கப்பூர்,
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் கடத்தல், விற்பனை, அதனை உற்பத்தி செய்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது. அதன் அளவுக்கு ஏற்ப தண்டனை உறுதி செய்யப்படும்.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில், போதைப்பொருள் கடத்திய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டில் மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரையிலான 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது அதிக எண்ணிக்கையாகும்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் சிலர் கூறி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வாரத்தில், அது விசாரிக்கப்படும் என தெரிகிறது. எனினும், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது என்பது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று சிங்கப்பூர் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.






