பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்... கொந்தளித்த இலங்கை


பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்... கொந்தளித்த இலங்கை
x

பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தன்னுடைய அதிருப்தியை இலங்கை தெரியப்படுத்தி உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. புயல் பாதிப்பு செய்தியை தொடர்ந்து, 2 இந்திய கடற்படையின் கப்பல்களில் 9.5 டன்கள் நிவாரண பொருட்கள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதுதவிர, இந்திய விமான படையின் 3 விமானங்கள் 31.5 டன்கள் அளவிலான நிவாரண பொருட்களையும், இதன்பின்னர் சுகன்யா கப்பலில் 12 டன்கள் நிவாரண பொருட்கள் என மொத்தம் 53 டன்கள் நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன.

இதேபோன்று சீனா, பாகிஸ்தானும் உதவி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்பி வைத்தது. மருந்து பொருட்கள், உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியது. அதனை வாங்கி பார்த்த இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், 2024-ம் ஆண்டு காலாவதியான தேதியை கொண்ட பல பொட்டலங்களும் இருந்துள்ளன. அவசரகால தேவைக்காக அனுப்பிய பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், காலாவதியாகவும் இருந்துள்ளன.

இதனை, இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளிவிவகார துறையினர் தீவிர கவனத்தில் கொண்டனர். பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தன்னுடைய அதிருப்தியை இலங்கை தெரியப்படுத்தி உள்ளது.

1 More update

Next Story