நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் - களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்

ராக்பெல்லர் சென்டரில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் சுமார் 50 ஆயிரம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், வண்ண விளக்குகள், இயேசு கிறிஸ்து பிறந்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலான குடில்கள், உருவ பொம்மைகளை வைத்து கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை அலங்காரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தற்போது விழாக்கால கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது. குறிப்பாக நியூயார்க்கின் ராக்பெல்லர் சென்டர் பகுதியில் சுமார் 7 மாடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த மரத்தின் மீது சுமார் 50 ஆயிரம் வண்ண மின்விளக்குகள் ஜொலிக்கின்றன. அதன் உச்சியில் பிரகாசமாக ஒளிரக்கூடிய ஒற்றை நட்சத்திரம் வைக்கப்பட்டுள்ளது.
ராக்பெல்லர் சென்டரில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகால பாரம்பரியமாக திகழ்ந்து வருகிறது. முதன்முதலில் கடந்த 1931-ம் ஆண்டு ராக்பெல்லர் சென்டர் கட்டிட பணியின்போது இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கட்டிட தொழிலாளர்கள் சிலர் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு 1933-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக ராக்பெல்லர் சென்டரில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






