நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாட்டில் 632 மருத்துவ முகாம்களில் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றனர்


நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாட்டில் 632 மருத்துவ முகாம்களில் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றனர்
x

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (2.12.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2025-26-ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.8.2025 அன்று சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாம் ஒன்றிற்கு 1.08 லட்சம் ரூபாய் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 பேர் பயனடைந்துள்ளனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான அளவிற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, மக்களுக்கு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தனியாக அறை ஏற்படுத்திட வேண்டும் என்றும், வருகை தரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களில் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் இம்முகாம்களில் நோய் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமிபிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story