புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது; சபாநாயகர் செல்வம்

தவெக தலைவர் விஜய் வரும் 5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.
புதுச்சேரி,
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரசாரத்தை ஒத்தி வைத்த விஜய் கடந்த மாதம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும் 5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். புதுச்சேரியின் காலப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் புதுச்சேரி போலீசில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது என்று அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லதுதான். ஏனென்றால் புதுச்சேரி சிறிய நகரம். தமிழகத்தை போன்று மிகப்பெரிய சாலைகள் இங்கு இல்லை. விஜய் வேண்டுமென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்
என்றார்.






