திருவண்ணாமலை தீபத்திருவிழா 9-ம் நாள்: புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் மாட வீதிஉலா

வீதிஉலாவின்போது பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் கோவிலின் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்ற வருகின்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று காலை விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இரவு 10 மணியளவில் நடைபெறும் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மகா தீபம்
திருவிழாவின் சிகர விழாவான மகா தீபதிருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு இன்று காலையில் கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தீபத்திருவிழாவில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






